பள்ளியில் நடந்த கத்திக்குத்து சம்பவமானது அனைவரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் உள்ள டொராண்டோவில் ஜார்ஜ் எஸ் ஹென்றி பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் பள்ளியில் 16 வயது சிறுவன் ஒருவன் நடைபாதையில் நடந்து சென்றுள்ளான். அப்போது அவனிடம் மற்றொரு 15 வயது சிறுவன் பேசியுள்ளான்.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையானது இறுதியில் மோதலில் முடிந்துள்ளது. இதனை அடுத்து 15 வயது சிறுவன் தன் கையில் வைத்திருந்த கத்தியால் மற்றொருவனை குத்தியுள்ளான். இதனை தொடர்ந்து காயம்பட்ட சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் காயம்பட்டவரின் உயிருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
குறிப்பாக ஆயுதத்தை பதுக்கி வைத்தல், மோசமான தாக்குதல், போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தாக்குதல் நடத்திய சிறுவன் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளான். இருப்பினும் கனடாவில் இளைஞர் குற்றவியல் சட்டத்தின்படி குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணுதல் என்பது மிக அரிதான ஒன்றாகும்.