தமிழகத்தில் அரசு பள்ளிகள் எப்போது திறக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்து பதிலளிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை வசூலிக்க தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் கொரோனா ஊரடங்கு காலத்தில் மொத்த கட்டணத்தை செலுத்த பெற்றோர்களை நிர்பந்திக்கும் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது.
இது தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. உயர் நீதிமன்ற உத்தரவில் 32 பள்ளிகள் மீறியதாக சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி திரு ஆனந்த் வெங்கடேஷ் மாவட்ட அலுவலர்கள் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அரசு பள்ளிகளை திறக்க எப்போது வாய்ப்புள்ளது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை அடுத்த மாதம் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.