பணம் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டக்கரம்மாள்புரம் பகுதியில் ஆழ்வார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அதன் பின் ஆழ்வார் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளின் பெட்டி திறந்து கிடந்துள்ளது. மேலும் அதில் இருந்த ரூ.400 திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து ஆழ்வார் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.
அதில் வாலிபர் ஒருவர் மோட்டார்சைக்கிள் பெட்டியிலிருந்து பணத்தை திருடிச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மருத்துவமனை வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் செய்துங்கநல்லூர் பகுதியில் வசிக்கும் தமீம் அன்சாரி என்பதும் இவர் மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்து பணத்தை திருடியதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் தமீம் அன்சாரியை கைது செய்துள்ளனர்.