மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த 1.89 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்துநகர் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் டிஜிட்டல் போர்டு செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 26-ஆம் தேதி திருச்செந்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள ஒரு வங்கியில் தங்க நகை ஒன்றை அடமானம் வைத்து ரூபாய் 1.89 லட்சத்தை பெற்றுக்கொண்டு வங்கியில் இருந்து வெளியே வந்துள்ளார். அதன்பின் தனது மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் பணத்தை வைத்து விட்டு தாயாருடன் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பழக்கடைக்கு சென்றார். அங்கு மோட்டார் சைக்கிள் அருகில் தாயாரை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று பழம் வாங்கிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் டேங்கில் வைத்திருந்த பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் பணத்தை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனையடுத்து மணிகண்டன் ஒரு கடையின் கண்காணிப்பு கேமராவை பார்த்துள்ளார். அதில் மணிகண்டன் பழம் வாங்கிக் கொண்டிருந்த போது 2 மர்ம நபர்கள் அங்கு வந்து தாயார் அருகில் சென்று பேருந்து நிலையத்திற்கு வழி கேட்டுள்ளனர். அதன்பின் மற்றொரு மர்மநபர் மோட்டார் சைக்கிளில் இருந்து பணப்பையை நைசாக எடுத்து அங்கிருந்து இருவரும் வேகமாக சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து மணிகண்டன் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.