பணமதிப்பிழப்பு செய்யப்பட்டிருக்கும் ரூபாய் நோட்டுகளை மாற்றி தருமாறு கலெக்டர் அலுவலகத்திற்கு பிச்சைக்காரர் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன கவுண்டனூர் கிராமத்தில் சின்னக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பிச்சைக்காரர். இந்நிலையில் இவர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியதாவது, சின்னகவுண்டனூர் கிராமத்தில் இருக்கும் புறம்போக்கு பகுதியில் குடிசை அமைத்து ஆதரவற்ற நிலையில் நான் வசித்து வருகின்றேன்.
எனக்கு ஐந்து வயதிலேயே கண் பார்வை பறிபோய்விட்டதினால் வாழ வழியின்றி பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறேன். அதன்பின் பிச்சை எடுத்து அதில் 65 ஆயிரம் ரூபாய் நான் சேமித்து வைத்திருக்கின்றேன். பின்னர் எனக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக மிகவும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதில் பிச்சை எடுத்து வைத்திருந்த பணத்தை எங்கு வைத்திருந்த என்பதை மறந்து விட்டேன். இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நான் வைத்திருந்த பணத்தை மீட்டு விட்டேன். ஆனால் அந்த ரூபாய் நோட்டுகள் தற்போது செல்லாது என எனக்கு தெரிந்தவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வந்த எனக்கு நான் சேமித்து வைத்திருந்த பணம் உதவும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தேன். ஆனால் அதுவும் பயனின்றி போனதினால் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றேன். ஆதலால் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டிருக்கும் 65 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூபாய்களை வழங்க உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.