தங்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்ற பின்பும் தங்களது போராட்டத்தை விவசாயிகள் முடிவுக்கு கொண்டு வரவில்லை. இதனையடுத்து சில கோரிக்கைகளை 5 பேர் கொண்ட குழு மூலமாக மத்திய அரசுக்கு விவசாயிகள் முன்வைத்துள்ளனர். இதுகுறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவதில் இழுபறி நீடித்து வருவதாக விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் விவசாய சங்கங்கள் கூடி முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர். அதன்பின் விவசாய சங்கத்தின் தலைவர் குர்னாம் சிங் சருனி பேசியதாவது “எங்களது அனைத்து கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். இதனிடையில் ஒருவேளை எங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டால் அது சிக்கலாகிவிடும். ஏனென்றால் எங்கள் மீதான வழக்குகளை அரசு வாபஸ் பெறாது. ஆகவே விவசாயிகள் மீதான வழக்குகள் எப்போதும் வாபஸ் பெறப்படும் என்று கால வரம்பை அரசு எங்களுக்கு கொடுக்க வேண்டும். மேலும் சிங்குவா எல்லைப் பகுதியில் சம்யுக்தா கிசான் மோர்ச்சா கூட்டத்தில் அரசின் கோரிக்கை தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்படும்.
அதன்படி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார். இவ்வாறு விவசாயிகள் விஷயத்தில் பஞ்சாப் அரசின் மாடலை மத்திய அரசு பின்பற்ற வேண்டும். அதாவது போராட்டத்தின் போது உயிரிழந்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கப்படும் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. இதேபோன்று மத்திய அரசும் நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்று கூறினார். இதனைத்தொடர்ந்து விவசாய தலைவர் யுத்விர் சிங் பேசியபோது மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட மனு பரிசீலனை செய்ய வேண்டிய கோரிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும். அதன்பின் விவசாய சங்கங்களின் தலைமை எடுக்கும் முடிவின் அடிப்படையில் அறிவிப்புகள் வெளியிடப்படும்” என்று கூறினார்