கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதன்படி மகாராஷ்டிரா மற்றும் டெல்லிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் மிக மோசமாக ஒமிக்ரான் பாதிப்புக்குள்ளான 3 மாநிலங்களில் தெலுங்கானாவும் இருக்கிறது. இதனிடையில் நேற்றைய நிலவரப்படி மாநிலத்தில் மொத்தம் 14 புதிய ஒமிக்ரான் பாதிப்பு பதிவாகி உள்ளது. மேலும் இந்த வைரஸ் மொத்தம் 38 பேருக்கு இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத் துறையின் கூற்றுப்படி புதன்கிழமை ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 259 பயணிகள் சோதனை செய்யப்பட்டனர். அதில் 4 பேருக்கு RT-PCR சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனிடையில் அதிக ஆபத்து நிறைந்த நாடுகளில் இருந்து பயணித்த பயணிகளின் 4 மாதிரிகளும் முக்கிய ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அதில் 2 ஒமிக்ரான் வகை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆபத்து பகுதி நாடுகளை தவிர மற்ற பகுதிகளிலிருந்து 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தெலுங்கானா மாநிலத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில் மக்கள் கூடுவதை தடுக்க தெலுங்கானா அரசுக்கு கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஒமிக்ரான் பரவல் பரவல் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.