பணியில் இருக்கும்போது இறந்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் வழங்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியில் இருக்கும் போது உயிரிழந்த காவல்துறையினருக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காவல்துறை அலுவலக நிர்வாக அதிகாரி சங்கரன், உதவி ஆய்வாளர் ரமேஷ், மாவட்ட தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, மற்றும் இறந்த காவல் துறையினரின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு கோவில்பட்டி பகுதியில் பணியாற்றிவந்த சப் இன்ஸ்பெக்டர் தாமோதரன் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவில் இருந்த ராஜேஸ்வரன் ஆகிய இருவரும் உடல்நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
இந்நிலையில் தமிழக முதல் அமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் பொது நிவாரண நிதியிலிருந்து பணியிலிருக்கும் போது உயிரிழந்த காவல் துறையினரின் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் இறந்த காவல்துறையினரின் குடும்பத்தாரிடம் ரூபாய் 3 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார். மேலும் அவர் இறந்த காவல்துறையினரின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார்.