பஞ்சு தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அ.குரும்பபாளையம் பகுதியில் ஈஸ்வர மூர்த்தி என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. அந்த குடோனில் தஞ்சாவூர் பகுதியில் வசிக்கும் கிருஷ்ணகுமார் என்பவர் பஞ்சு கழிவு அரைக்கும் ஆலை நடத்தி வருகிறார். அந்த ஆலையில் வெளிமாநிலத்தில் வசிக்கும் 5 – க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் எந்திரத்தை இயக்கி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அரவை இயந்திரத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனையடுத்து எந்திரத்தில் பஞ்சுக் கழிவுகள் இருந்ததால் தீ வேகமாக பரவியது.
இதனால் குடோன் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனைப் பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியதால் தொழிலாளர்கள் அவினாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.