பஞ்சு மில்லில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபாளையம் பகுதியில் செய்யது என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளிபாளையம் பகுதியில் பனியன் கழிவு துணியை அரைத்து பஞ்சாக்கும் நூல் மில் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தொழிலாளர்கள் அதிகாலை இரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீ மளமளவென அங்கு குவிக்கப்பட்டிருந்த பனியன் கழிவு துணிகளில் பற்றி எரிந்தது. அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் அணைக்க முடியாததால் இதுகுறித்து தொழிலாளர்கள் மில் உரிமையாளர், பல்லடம் தீயணைப்பு துறையினர் மற்றும் மங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து தீயணைப்பு துறையினர் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.