பஞ்சு ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே.கைலாசபுரம் கிராமத்தில் டேவிட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் உள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ் அளவந்தன்குளம் பகுதியில் வசிக்கும் மைக்கேல் என்பவருக்கு சொந்தமான லாரியில் கோவையிலிருந்து பஞ்சுலோடு ஏற்றிகொண்டு தக்கலை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது லாரியின் பக்கவாட்டில் உள்ள இரும்பு தகரம் உடைந்துள்ளது. இதனை அறிந்த சுரேஷ் தன் சொந்த ஊரான கே.கைலாசபுரத்தில் உள்ள வெல்டிங் பட்டறையில் லாரியை நிறுத்தியிருந்தார்.
இந்நிலையில் உடைந்த இரும்பு தகரத்தை பொருத்தி கொண்டிருந்தபோது திடீரென அதிலிருந்து தீப்பொறி பறந்து லாரியின் மேலிருந்த பஞ்சு மீது விழுந்தது. இதனையடுத்து லாரி முழுதும் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுரேஷ் இதுகுறித்து ஒட்டப்பிடாரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். ஆனால் இந்த விபத்தில் லாரி மற்றும் ரூ. 1.70 லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து நாசமானது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நாரைக்கிணறு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.