பப்ஜி விளையாட்டு ஆர்வத்தால் மளிகை கடைக்காரர் சேமித்து வைத்திருந்த 8 லட்ச ரூபாய் பணத்தை பெற்ற பிள்ளைகளே திருடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் ஒரு மகன் 10 மற்றும் மற்றொரு மகன் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் நடராஜன் வீடு கட்டுவதற்காக வீட்டில் சேமித்து வைத்திருந்த 8 லட்சம் ரூபாய் திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த நடராஜன் தனது இரு மகன்களிடமும் விசாரித்துள்ளார். ஆனால் அவர்கள் பணம் காணாமல் போனது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி உள்ளனர்.
எனினும் நடராஜன் கடையின் ஒரு பகுதியில் சுவருக்கு நடுவே துளையிட்டு யாருக்கும் தெரியாமல் அங்கு பணத்தை சேமித்து வைத்துள்ளார். ஆகவே இந்த ரகசிய இடம் வேறு யாருக்கும் தெரியாததால் மீண்டும் தன் 2 மகன்களிடம் விசாரித்துள்ளார். அப்போது 2 மகன்களும் அந்த பணத்தை திருடியதை நடராஜனிடம் ஒப்புக்கொண்டனர். அதாவது பப்ஜி விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர்கள் இருவரும் அவ்விளையாட்டில் சிறப்பாக செயல்படுபவர்களிடம் தொடர்பை ஏற்படுத்துவதற்காக, தங்களது 15 வயது நண்பரிடம் பணத்தை கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நடராஜன் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பணத்தை அவர்களிடம் அவ்வப்போது வாங்கிய 15 வயது சிறுவன், அதை தனது பெற்றோரிடம் கொடுத்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதில் புகாருக்கு ஆளான 15 வயது சிறுவனின் தந்தை வணிகவரித் துறையில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் மனைவியுடன் தலைமறைவாகி இருக்கிறார். இது தொடர்பாக அந்த சிறுவனின் பெற்றோர் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.