Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாராஸைட்’ தயாரிப்பாளருக்கு எதிராக வழக்கு – விஜய் படத் தயாரிப்பாளர் தகவல்..!

ஆஸ்கர் வென்ற ‘பாராஸைட்’ படத்தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்வது குறித்து சர்வதேச வழக்கறிஞர்களுடன் ஆலோசிப்பதாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் தேனப்பன் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதில் கொரிய மொழியில் போங் ஜூன் ஹோ இயக்கத்தில் வெளியான ‘பாராஸைட் திரைப்படத்திற்கு சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

‘பாராஸைட்’ படம் சிறந்த திரைப்படம், சிறந்த சா்வதேச திரைப்படம் (அயல்மொழி), சிறந்த இயக்குநா், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் 4 ஆஸ்கா் விருதுகளை அள்ளியது. இந்நிலையில், படத்தின் கதை 1999-ஆம் ஆண்டு தமிழில் விஜய் நடிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான மின்சார கண்ணா படத்தைப் போலவே உள்ளதாகச் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகின.

Oscar Winning Parasite copy of vijay's minsara kanna

இதனைத்தொடர்ந்து மின்சார கண்ணா படத்தின் தமிழ் பதிப்பின் உரிமையை வைத்திருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன், ஆஸ்கார் விருதுபெற்ற ‘பாராஸைட்’ தயாரிப்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர உள்ளதாக செய்திகள் உலா வந்தன. இதையடுத்து தயாரிப்பாளர் தேனப்பனை தொடர்பு கொண்டு பேசியபோது, ”நான் ஏற்கனவே ’காதலா காதலா’ படம் எடுத்தேன் அந்த படமும் ரிலீசான பிறகு ’ஹவுஸ் ஃபுல்’ என்ற படம் இதேபோன்று எடுக்கப்பட்டுள்ளது என்று எனது நண்பர்கள் கூறினர். அதன் பிறகு சஜித் நதியத்வாலா என்ற ஹிந்தி தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்தோம் அந்த வழக்கு இன்றும் நடைபெற்று வருகிறது.

தற்பொழுது ஆஸ்கார் விருது வென்ற ‘பாராஸைட்’ படமும் மின்சார கண்ணா படத்தின் கதையும் ஒன்றாக உள்ளது என்று எனது நண்பர்கள் கூறினார்கள். அதன்பிறகு அந்த படத்தை நானும் பார்த்தேன் அது உண்மை தான் என்று தோன்றியது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்ய சர்வதேச வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன். திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைகளில், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டுள்ளேன். ‘மின்சார கண்ணா’ கதையை பயன்படுத்திய ‘பாராஸைட்’ தயாரிப்பாளர்களிடமிருந்து நீதிமன்றம் மூலம் இழப்பீடு கோர உள்ளேன் என்றார்.

Categories

Tech |