ஓரினச்சேர்க்கைக்கு மறுப்புத் தெரிவித்த சிறுவனை கல்லால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் பகுதியில் மேம்பாலத்திற்குக் கீழ் தலையில் பலத்த காயங்களுடன் ஒரு சிறுவன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளான். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காயமடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவன் அதே பகுதியில் வசிக்கும் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவன் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் இந்த மாணவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளான். அதற்கு அந்த மாணவன் மறுப்புத் தெரிவித்ததால் 17 வயது சிறுவன் அவனின் தலையில் கல்லைப் போட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளான். இதனையடுத்து காவல்துறையினர் அந்த 17 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்த சிறுவனின் பெற்றோர் இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்களை காவல்துறையினர் கைது செய்வதற்கு மறுப்பதாகவும் கூறி திடீரென காவல் நிலையத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய சமரச பேச்சுவார்த்தையால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.