தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மகளை கொலை செய்ய முயன்றதாக பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ராமையா கவிதா தம்பதியின் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து விட்ட நிலையில் இரண்டாவது மகள் போடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தனது அக்காள் கணவரின் தம்பியை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாணவி தனது காதலனுடன் செல்போனுடன் பேசியதாக அவர் தங்கியிருந்த விடுதி வார்டன் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து விடுதிக்குச் சென்ற அவர்கள் தங்கள் மகளை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். போடியிலிருந்து சின்னமனூர் வரும் வழியில் மார்க்கையன்கோட்டை அருகே வரும் போது மாணவியின் பெற்றோர் அவரை தரக்குறைவாக பேசியதாகவும் அங்குள்ள முல்லைப் பெரியாறு ஆற்றில் தள்ளி விட்டதாகவும் கூறப்படுகிறது. உயிருக்கு போராடி தண்ணீரில் தத்தளித்த மாணவி மரக் கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு உதவி கோரி கூக்குரலிட்ட நிலையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். மாணவி அளித்த புகாரின் பேரில் அவரது பெற்றோரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது மாணவி தேனி அருகே கொடுவிலார்பட்டி காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.