இன்றைய காலகட்டத்தில் உணவு பழக்கம் வழக்கம் என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு மாறியுள்ளது. முந்திய காலத்தில் இயற்கை உணவுகளை உண்டு வந்த நம் முன்னோர்கள் எவ்வளவு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள் என்பது நமக்கு தெரியும். தற்போது செயற்கை உணவுகளை ருசிக்காக மட்டும் நாம் சாப்பிட்டு வருகிறோம். அதனால் ஏற்படும் பின்விளைவுகள் அறியாமல் திரும்பத் திரும்ப நாம் அந்த உணவுகளை உட்கொள்வதால் பல்வேறு நோய்கள் வருவதோடு மட்டுமல்லாமல் உடலில் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டு மரணம் வரை கொண்டு செல்கிறது.
நம் குழந்தைகள் அடம் பிடிக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் விரும்பும் துரித உணவுகளான பிரைட் ரைஸ், நூடுல்ஸ், புலாவ் ரைஸ் போன்ற நாக்கில் எச்சில் ஊரும் பலவிதமான உணவுகளை வாங்கி கொடுக்கிறோம். குழந்தையாக அதற்கு அடிமையாகி வளர வளர அந்த உணவை மட்டுமே உட்கொள்ளும் பழக்கத்துக்கு ஆளாகிறார்கள். துரித உணவுகளில் மோனோசோடியம் குளுட்டோமேட் எனப்படும் உப்பானது அதிகளவில் சேர்க்கப்படுகிறது. இது இளமைப் பருவத்தில் குழந்தைகளுக்கு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு வயிற்று வலி, தலைவலி, வாந்தி மற்றும் நரம்புக் கோளாறுகளும் ஏற்படும்.
இந்த துரித உணவுகளை இரவு நேரங்களில் குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அது விஷமாக மாறி உடலில் அதிகளவு கேடு விளைவிக்கும். இதுபோன்ற துரித உணவுகளை குழந்தைகளுக்கு சாப்பிட பெற்றோர்கள் கொடுத்தால் மாதத்துக்கு ஒருமுறை பகல் வேளையில் கொடுக்கலாம் என்று கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். பிரைட் ரைஸ் நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கொடுக்கவே கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.