உத்தரப் பிரதேசம் மாநிலம் பாக்பாத் நகரிலுள்ள ‘உஷா நர்சிங் ஹோம்’ என்ற மருத்துமனையில் 2018ஆம் ஆண்டு ஷிகா என்பவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அப்போது மருத்துவச் செலவு ரூ. 40 ஆயிரம் செலுத்த பெற்றோர்களிடம் பணம் இல்லாததால் மருத்துவர் குழந்தை தர மறுத்துவிட்டார்.
இதுகுறித்து ஷிகா கூறுகையில், “செப்டம்பர் 2018ஆம் ஆண்டு எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது மருத்துவச் செலவு 40 ஆயிரம் ரூபாய்யை எங்களால் செலுத்த முடியவில்லை. இதனால் மருத்துவர் மருத்துவ கட்டணம் முழுவதையும் செலுத்தும் வரை குழந்தையை அவரே வைத்துக்கொள்வதாக கூறினார்” என்று வேதனையுடன் கூறுகிறார்.
ஷிகாவின் கணவர் மோஹர் சிங் கூறுகையில், “நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக 30 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டோம். மீத தொகையுடன் அவரை அணுகியபோது, அவர் எங்கள் குழந்தையை தர மறுத்து எங்களை விரட்டியடித்துவிட்டார்” என்றார்.
இந்தச் சம்பவம் பற்றி கூடுதல் கண்கானிப்பாளர் அனில் குமார் சிங் கூறுகையில், “நாங்கள் மருத்துவரிடம் விசாரணை செய்தபோது, அந்த ஜோடி அவர்களது குழந்தையை வேறு நபரிடம் விற்றுவிட்டதாகவும், அதை தற்போது மறைப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். அவர் கூறியதைப் போல குழந்தையை விற்று இருந்தால் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.