மாந்திரீக பூஜை செய்வதாக கூறி தம்பதியரை அரிவாளால் வெட்டிவிட்டு பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அகரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஆறுமுகம் – ஈஸ்வரி. ஆறுமுகம் அப்பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இத்தம்பதியினருக்கு உதயகுமார் என்ற மகன் உள்ளார். அவர் திருமணமாகி கோவை மாவட்டத்தில் பைனான்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் உதயகுமார் குழந்தை இல்லாமல் இருந்துள்ளார். இதனால் ஈஸ்வரி தன்னுடைய மகன் உதயகுமாருக்கு குழந்தைப்பேறு வேண்டி பல்வேறு கோயில்களுக்கு சென்று பரிகாரம் செய்யததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இவர்களின் நிலையை அறிந்து குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுமென்றால் மாந்திரீக பரிகார பூஜை செய்ய வேண்டுமென்று சில மர்ம நபர்கள் கூறியதாக தெரிகிறது.
அதை நம்பிய ஆறுமுகமும் ஈஸ்வரியும் தங்கள் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுமென்று அந்த நபர்களை அழைத்து வந்து பூஜைக்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர் . அப்போது அங்கு வந்த அந்த நபர்கள் பரிகார பூஜைகள் செய்வதாக கூறி தம்பதியரை அரிவாளால் வெட்டிவிட்டு 5 சவரன் தங்க நகையையும் பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே ஈஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்ட பொதுமக்கள் ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.