சபாநாயகர் தனபால் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், ஜூன் 28-ம் தேதி தொடங்கி ஜூலை 30-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 28-ஆம் தேதி கூடும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது மற்றும் அந்த நாட்களுக்கான அலுவல்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று தமிழக சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் தனபால், சட்ட பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28-ஆம் தேதி தொடங்கி ஜூலை 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றார். விடுமுறை நாட்கள் தவிர்த்து மொத்தம் 23 நாட்கள் கூட்டத் தொடர் நடைபெறும் என்றும், எல்லா நாட்களும் கேள்விகுரிய நேரம் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.
மேலும் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் எடுத்துக்கொள்ளப்படும் நாட்களையும் பட்டியலிட்டு கூறினார். தமக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படுமா என்பது அன்றைய அஜெண்டாவில் தெரிவிக்கப்படும் என்றும் சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.