பிளேடால் கழுத்தை அறுத்து புரோட்டா மாஸ்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இடுவம்பாளையம் ஜீவாநகரில் உள்ள சாலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒருவர் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து வீரபாண்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த நபரை உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் வின்சர் என்பதும் இவர் திருப்பூரில் உள்ள புரோட்டா கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை பாத்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் வின்சரின் மனைவி மற்றும் குழந்தைகள் திருநெல்வேலியில் வசித்து வருகின்றனர். மேலும் வின்சர் மட்டும் திருப்பூரில் தனியாக தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனையடுத்து வின்சர் மயங்கி கிடந்த இடத்தில் பிளேடு ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வின்சர் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.