புரோட்டா மாஸ்டர் மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள பாறையடி பகுதியில் முகமது ரபிக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செய்யது சுலைமான் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சவுதி அரேபியாவில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்யது சுலைமான் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் செய்யது சுலைமான் மதுபோதையில் வீட்டிற்குச் சென்று மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார்.
இதனையடுத்து மறுநாள் காலையில் செய்யது சிலைமான் காதில் ரத்தம் வழிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் இதுகுறித்து தென்காசி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செய்யது சுலைமானின் உடலை உடனடியாக மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செய்யது சுலைமான் அளவுக்கதிகமாக மது குடித்ததால் இறந்தாரா? இல்லை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.