தெருவோரப் பார்ட்டியில் பங்கேற்ற இரண்டு கருப்பின இளைஞர்கள் பெண் ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்
பிரிட்டனில் ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் தெருவோர பார்ட்டி ஒன்று நடைபெற, அதில் பங்கேற்ற இரண்டு இளைஞர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த 32 வயது பெண்மணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க, அதை தொடர்ந்து காவல்துறையினர் அங்கிருக்கும் மோஸ் சைட் பகுதிக்கு விரைந்து வந்தனர். சில நிமிடங்களுக்கு பிறகு இரண்டு கருப்பின இளைஞர்கள் துப்பாக்கி குண்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்துள்ளனர்.
அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அது பலனின்றி 36 வயதான அபயோமி மற்றும் 21 வயதான செரிஃப் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். தெருவோர கொண்டாட்டத்தில் சுமார் 200 பேர் திரண்டிருந்த நிலையில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்பது மிகவும் அரிது எனவும், அதே நேரம் காதைப் பிளக்கும் அளவிற்கு இசையின் சத்தம் வேறு இருந்ததாகவும் கொண்டாட்டத்தில் பங்கேற்ற நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண் காவல்துறையினரின் பிடியில் இருப்பதாகவும் பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை காவல்துறையினரிடம் பகிர்ந்து கொள்ளலாம் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.