பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகரை மூன்று பேர் பீர் பாட்டிலால் தாக்கி செல்போனை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரியஜெட்டிபள்ளம் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருக்கின்றார். இந்நிலையில் சிவா பெரியஜெட்டிபள்ளத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 பேர் சிவாவை வழி மறுத்துள்ளனர். அதன்பின் அவர்கள் மூவரும் பீர் பாட்டிலால் சிவாவின் தலையில் பலமாக தாக்கி உள்ளனர்.
மேலும் அவர்கள் சிவாவின் சட்டைப்பையில் இருந்த செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதன்பின் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து மகாராஜகடை காவல் நிலையத்தில் சிவா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகரை தாக்கிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.