மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4352 பருத்தி மூட்டைகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மூட்டைகள் ஏலத்திற்கு விடப்பட்டது. இந்நிலையில் இந்த வாரம் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு உடுமலைப்பேட்டை, திருச்சி, கரூர், பொள்ளாச்சி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், அரவக்குறிச்சி மற்றும் கள்ளிமந்தயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 386 விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதனையடுத்து உடுமலை, புளியம்பட்டி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பருத்தியை கொள்முதல் செய்வதற்காக வந்தனர்.
இதில் பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8250 க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.6200 க்கும் சராசரி விலையாக ரூ.7550 க்கும் விலை போனது. இதனையடுத்து இந்த வாரம் மொத்தமாக 4352 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தது. இதனுடைய மொத்த மதிப்பு 1 கோடியே 57 லட்சத்து 7 ஆயிரத்து 294 ஆகும். இதுகுறித்த தகவல்களை திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்துள்ளார்.