ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள கட்டணம் வசூலிக்கப்பட்டு அனுமதி சீட்டு கொடுக்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்கா போன்றவற்றில் பொதுமக்கள் இன்று முதல் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடை பயிற்சி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டு நடைபயிற்சி செய்பவர்களுக்காக புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது நடைபயிற்சி செல்வதற்காக இதுவரை கட்டணம் வசூலிக்கப்படாத நிலையில் தற்போது சுற்றுலா பயணிகள் ஒரு மாதத்திற்கு 200 ரூபாய் கட்டணம் செலுத்தி பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
இதுவரை 15 பேர் கட்டணத்தை செலுத்தி அனுமதி சீட்டு பெற்றிருக்கின்றனர். இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும் போது, வழக்கமாக நடைபயிற்சி செல்லும் 150 பேர் கட்டணமில்லா அனுமதி சீட்டு வைத்துள்ளதாகவும், அவர்கள் கட்டணத்தை செலுத்தி தங்களது அனுமதிச்சீட்டை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பூங்காவில் உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பிறகு தினமும் 100 பேர் மட்டுமே நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.