பசுமாட்டுக்கு வளைகாப்பு நடத்திய நிகழ்ச்சி அனைவருக்கும்ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு பசு மாடு இதுவரை 4 காளை கன்றுகளையும், ஒரு பசு கன்றையும் ஈன்றது. அந்த பசுவின் கன்றுக்கு அண்ணாமலை குடும்பத்தினர் ஐஸ்வர்யா என பெயர் சூட்டி தனது பிள்ளை போல் வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த ஐஸ்வர்யா என்ற பசு மாடு 9 மாத சினையாக இருந்ததால் வளைகாப்பு நடத்த அண்ணாமலை குடும்பத்தினர் ஆசைப்பட்டனர்.
இதனையடுத்து கோவிலில் வைத்து ஐஸ்வர்யா என்ற பசு மாட்டுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பட்டு துண்டுகள் கட்டி அலங்காரம் செய்தனர். அதன் பின் பசு மாட்டின் கொம்பில் வளையல்களை அணிவித்து நலங்கு வைத்து வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர். மேலும் கோவிலில் நடைபெற்ற இந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அண்ணாமலை உறவினர்கள், திருமயம் கிராமத்திலுள்ள பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.