ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் நகரில் அமைந்திருக்கும் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 28, 29, 30 ஆகிய தினங்களில் தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் நடபாண்டிலும் தேவர் ஜெயந்தி விழா தொடங்கிய நிலையில் இன்று மிக சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் அதிமுக, திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். அதன் பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் பசும்பொன் நகருக்கு சென்று முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு முதுகு வலி பிரச்சனை இருப்பதால் மருத்துவர்கள் நீண்ட தூரத்திற்கு பயணம் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதனால் முதல்வர் பசும்பொன் நகருக்கு செல்லும் பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், மூத்த அமைச்சர்களான துரைமுருகன், ஐ. பெரியசாமி மற்றும் கே.என் நேரு போன்றோர் மட்டுமே கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது உதயநிதி ஸ்டாலின் முதல்வருக்கு பதிலாக பசும்பொன் நகருக்கு செல்ல இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் திமுகவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பசும்பொன் நகருக்கு செல்வதாக அறிவிப்பு வெளியானதால் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் சற்று பீதியில் இருந்தனர்.
ஆனால் முதல்வரின் பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பசும்பொன் நகருக்கு செல்வதில் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது புதிய டுவிஸ்டாக உதயநிதி ஸ்டாலின் செல்வது மற்ற அரசியல் கட்சியை சேர்ந்தவர்களிடம் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பசும்பொன் நகரில் நடக்கும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டால் மறவர் சமுதாயத்தின் ஆதரவை பெற்றுவிடலாம் என்பதற்காகவே பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.