பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் தொழிலாளி படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிந்தப்பள்ளி கிராமத்தில் கதிரேசன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமாக பட்டாசு ஆலை இருக்கின்றது. இந்த ஆலையில் கதிரேசன் மகன் சங்கர் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வழக்கம்போல் ஊழியர்கள் வேலையில் ஈடுபட்டு வெடிகளில் மருந்து செலுத்தி கொண்டிருக்கும்போது ஏற்பட்ட உராய்வினால் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதாக தெரிகின்றது. இதில் சுந்தர குடும்பன் பட்டியைச் சேர்ந்த முகேஷ் கண்ணன் என்பவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டதனால் அவரை சிவகாசி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின் சாத்தூர் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சாத்தூர் ஆர்.டி.ஓ. புஷ்பா, துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ், தாசில்தார் வெங்கடேசன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். இதுகுறித்து டவுன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.