ஹாங்காங்கில் பத்திரிக்கை சுதந்திரத்தை ஆதரிக்கும் வகையில் மக்கள் அனைவரும் செய்தித்தாள்களை வாங்கி குவித்து வருகின்றனர்.
ஹாங்காங்கின் நெக்ஸ்ட் டிஜிட்டல் என்ற நிறுவனம் சார்பில் ஆப்பில் டெய்லி என்ற தினசரி செய்தித்தாள் மிகவும் பிரபலமாகி வருகிறது.இந்தச் செய்தி தாளில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும், அதன் தலைவர்களின் சர்வாதிகாரப் போக்கை விமர்சித்தும், ஹாங்காங்கில் ஜனநாயகம் நிலைநாட்ட வேண்டும் என்ற கட்டுரைகளும், செய்திகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆப்பிள் டெய்லி பத்திரிக்கை நிறுவனரான ஜிம்மி வாய்(72) மற்றும் அவரின் இரண்டு மகன்கள் ஆகியோரை ஹாங்காங் காவல்துறையினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஹாங்காங் காவல்துறையினரின் இந்த நடவடிக்கையானது பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்று மக்கள் அனைவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் ஹாங்காங்கில் உள்ள மக்கள் அனைவரும் பத்திரிக்கை சுதந்திரத்தை ஆதரிக்கும் வகையில் ஆப்பிள் டெய்லி செய்தித் தாள்களை வாங்கி குவித்து வருகின்றனர். இதனால் ஆப்பிள் டெய்லி செய்தித்தாள்களில் விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஹாங்காங்கில் செய்தித்தாள் விற்பனை செய்துவரும் நபரொருவர் இதுபற்றி கூறும்போது, “ஒரு நாளில் எனக்கு நூறு செய்தித்தாள் களுக்கும் குறைவாகவே விற்பனை நடக்கும். ஆனால் இன்று அதிகாலையிலேயே 200 செய்தித்தாள்கள் விற்பனையாகி விட்டன. ஒரே நபர் இரண்டுக்கும் மேற்பட்ட செய்தித்தாள்களை வாங்கி செல்வதை என்னால் பார்க்க முடிகிறது” என்று அவர் கூறியுள்ளார்.