பத்தாம் வகுப்பு படித்து விட்டு 25 வருடங்களாக பொதுமக்களுக்கு போலி மருத்துவம் பார்த்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி பகுதியில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் இருக்கிறது. தற்போது மீண்டும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஊரக பணிகள் நல இணை இயக்குனர் விஸ்வநாதன் மற்றும் துணை காவல்துறை சூப்பிரண்டு சரவணகுமார் உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் ஜெயராமன் நடத்தி வந்த கிளினிக்கில் திடீரென சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ஜெயராமன் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து ஜெயராமனை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து அவரிடம் இருந்த மருத்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போலி மருத்துவரான ஜெயராமனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.