கொரோனா நோய் பரவல் அதிகரிப்பு காரணமாக படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மத்திய அரசின் உதவியை டெல்லி அரசு நாடியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோய்தொற்று அதிக அளவில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இதனைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. நாடு முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனாவால் டெல்லியில் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேற்று மட்டும் ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் டெல்லி மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சைக்காக நிரம்பியுள்ளன.
நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லாமல் அனைத்து மருத்துவமனைகளும் திண்டாடி நிற்கிறது. அதன்பின் மாநில அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுகளில் 100க்கும் குறைவான படுக்கைகளை காலியாக உள்ளன. மாநிலத்தில் கொரோனா தொற்று சதவீதம் 30 சதவீதம் அதிகரித்து இருப்பது குறித்து மாநிலத்தில் ஒவ்வொரு நொடியும் நிலைமை மோசமாகிக் கொண்டே போவதாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். எனவே மத்திய அரசிடம் படுக்கை வசதியும், ஆக்சிஜன் வசதிகளையும் அதிகரிக்குமாறு கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி கெஜ்ரிவால் நேற்று கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில்”டெல்லியில் உள்ள மத்திய அரசு மருத்துவமனைகளில் 10,000 படுக்கைகளில் வெறும் 1,800 படுக்கைகள் மட்டுமே கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கையை 7000 ஆக அதிகரிக்க வேண்டும்’ என கேட்டுள்ளார்.
மாநில அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டதை சுட்டிக்காட்டியுள்ள கெஜ்ரிவால், மாநிலத்தில் எழுந்துள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறையையும் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு முன்பு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் நேற்று காலையில் கலந்துரையாடிய அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலத்திற்கு கூடுதல் படுக்கைகள் உடனடியாக தயார் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்கு படுக்கையின்றி தவிக்கும் டெல்லி அரசு கடந்த ஆண்டைப் போல ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றி அவற்றில் 5 ஆயிரம் படுக்கைகள் வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தருமாறு ரயில்வே துறையிடம் கேட்டுள்ளது. குறிப்பாக ஆனந்த் விஹார் மற்றும் சாகூர் பஸ்தி ரயில் நிலையங்களில் இத்தகைய வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தருமாறு ரயில்வே துறையிடம் தலைவர் சுனிதாவுக்கு டெல்லி தலைமை செயலாளர் விஜயகுமார் தேவ் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லியில் சென்ற ஆண்டு 503 ரயில் பெட்டிகளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டாக ரயில்வே துறை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கும்பமேளாவுக்கு சென்று நீராடிய பக்தர்கள் அனைவரும் தங்களின் வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மாநில பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. தனிமைப்படுத்திக் கொள்ள தவறினால் பக்தர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் கட்டாய தனிமைப்படுத்திலுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.