வீட்டில் பற்றி எரிந்த தீயை அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பெருமாள் இரவு தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்ததால் புகைமூட்டம் உருவாகியுள்ளது. இதனைபார்த்த பெருமாள் தனது குடும்பத்துடன் வேகமாக வெளியே ஓடி வந்துள்ளார். இதுபற்றி பெருமாள் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த நகை, பணம், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவைகள் முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளது. இதனையடுத்து ஊராட்சி ஒன்றியத் தலைவர் கே.சி.பி.இளங்கோ மற்றும் தாசில்தார் ரவிசங்கர் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டுள்ளனர். அதன்பின் பாதிக்கப்பட்ட பெருமாள் குடும்பத்திற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கியுள்ளார்.