கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பட்டாசு கடையில் நேற்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தனர் மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில், “சங்கராபுரத்தில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்து 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையடுத்து பட்டாசு கடை தீ விபத்தில் காலித் ஷா ஆலம், சையத் அலி, ஷேக் பஷீர் மற்றும் அய்யாசாமி போன்ற 6 நபர்கள் உயிரிழந்தனர். இதில் அய்யாசாமி என்பவர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார். பட்டாசு கடைகள் விபத்தில் உயிரிழந்த அனைவரும் அவரது குடும்பத்திற்கு வருவாய் ஈட்டும் உறுப்பினர்கள் என்பதால் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
இதனால் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அந்த குடும்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அதனைப்போலவே காயமடைந்த அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு தலா 5,00,000 இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமில்லாமல் பட்டாசு கடைகளுக்கு பாதுகாப்பான விதிமுறைகளை வலுப்படுத்தி இதுபோன்ற தீ விபத்துகள் நடப்பதை அரசு தடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.