பனை மரங்கள் அறுத்து விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலரின் கோரிக்கையாக இருக்கின்றது.
தமிழகத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 9 கோடி பனை மரங்கள் இருந்த நிலையில் தற்போது 2 1/2 கோடி மட்டுமே இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பனை மரத்தின் மூலம் கிடைக்கும் கிழங்கு, நுங்கு, பதனீர் போன்ற அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியம் தரகூடியதாக இருக்கின்றது. மேலும் பனை வெல்லத்தில் செய்யப்படும் கருப்பட்டி இரும்புச்சத்தும், பதனீரில் கால்சியம் சத்தும் இருக்கின்றது. ஆனால் சிலர் பனை மரத்தை பல்வேறு காரணங்களுக்காக அறுத்து விற்பனை செய்வதால் நிலத்தடி நீர் சீக்கிரமாக குறைந்து வருகின்றது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதிகளில் செங்கல் சூளைகள் மற்றும் வெளியூரில் உள்ள தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்காக இங்கு இருக்கும் பனை மரங்களை அறுத்து விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு பல்வேறு பயன்களைத் தரும் பனை மரம் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பனை மரங்கள் அறுத்து விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலரின் கோரிக்கையாக இருக்கின்றது. மேலும் பனை மரங்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், பருத்திசேரி ராஜா மற்றும் ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.