ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினருக்கு எதிராக அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இதனால் தலீபான்களுக்கு அஞ்சி அங்குள்ள மக்கள் பல்வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்று வருகின்றனர். அதிலும் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பா போன்ற பல நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களை அங்கிருந்து விமானம் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர். மேலும் ஆப்கானைச் சேர்ந்தவர்களும் தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் விமான நிலையத்தில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளின் ஒரு பிரிவான ஹரசன் அமைப்பினர் நேற்று முன்தினம் தற்கொலை படை தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 13 அமெரிக்கா படை வீரர்கள் உட்பட மொத்தம் 175 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் உரையாற்றினார். இதனையடுத்து இன்று ஆப்கானில் உள்ள நங்ஹகர் மாகாணத்தில் இருக்கும் ஹரசன் பிரிவு பயங்கரவாதிகளை குறி வைத்து ஆளில்லா ட்ரோன் விமானம் மூலம் அமெரிக்கா படையினர் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த தாக்குதலானது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இச்செய்தியை அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
குறிப்பாக காபூல் விமான நிலையத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதலானது அமைந்துள்ளது. அதிலும் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா படைகள் வரும் 31-ஆம் தேதி வெளியேறும் நிலையில் நடைபெற்றதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் இருக்கும் அமெரிக்கர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஏனெனில் அங்கு மற்றொரு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.