பயங்கரவாத தாக்குதல் வழக்கில் நீதிபதிகள் பிரதமரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள தெஹ்ரீக்-இ-தலீபான் அமைப்பினர் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி பெஷாவர் நகரில் இருக்கும் ராணுவம் பள்ளிக்கூடம் ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 132 சிறுவர்கள் உட்பட மொத்தம் 147 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவமானது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலீபான்களின் துணையோடு தெஹ்ரீக்-இ-தலீபான் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தெஹ்ரீக்-இ-தலீபான் அமைப்பினர் ஒரு மாத காலத்துக்கு சண்டை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இதனை பாகிஸ்தான் அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்த நிலையில் பெஷாவர் தாக்குதல் குறித்த விசாரணையானது 3 நீதிபதிகளை உடைய உச்சநீதிமன்றத்தில் அமர்வுக்கு வந்துள்ளது. இதனை அடுத்து நீதிமன்றத்தில் உடனடியாக பிரதமர் இம்ரான் கான் ஆஜர் ஆகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் நேற்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மேலும் அவரிடம் நீதிபதிகள் ‘ 150 பேரை கொன்ற பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஏன்? இந்த தாக்குதல்களுக்காக உங்கள் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்ன? என பல கேள்விகளை அவரிடம் சரமாரியாக கேட்டனர். மேலும் இந்த தாக்குதலில் தங்களது பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் நஷ்டஈடு கேட்கவில்லை.
அவர்கள் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறார்கள்’ என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பயங்கரவாத தாக்குதல் வழக்கில் நாட்டின் பிரதமரை வரவழைத்து சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சம்பவமானது பாகிஸ்தான் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.