Categories
கிரிக்கெட் விளையாட்டு

பயிற்சியாளருடன் இணைந்து … ‘இந்திய மகளிர் அணியை வலுவாக்க பணியாற்றுவேன்’ – மிதாலி ராஜ்…!!!

இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளரான ரமேஷ் பவாருடன் இணைந்து ,சிறப்பாக பணியாற்றுவேன் என்று அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார்  நியமிக்கப்பட்டார். இந்திய மகளிர் அணி வருகின்ற ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இங்கிலாந்து அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் தொடர் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடரில் மூலம்  இந்திய மகளிர் அணியில் பயிற்சியாளர் பணியை  ரமேஷ் பவார்  தொடங்க உள்ளார். இதற்கு முன் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய மகளிர் அணியில் 5 மாதம் இடைக்கால தலைமை பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவாருக்கும், அணியின் மூத்த வீராங்கனையான மிதாலி ராஜ்க்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

அப்போது நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம், இந்திய அணி தோல்வியை சந்தித்தது. குறிப்பாக அந்த போட்டியில் இந்திய மகளிர் அணியின் மூத்த வீராங்கனையான மிதாலி ராஜ் சேர்க்கப்படாதது ,சர்ச்சையை கிளப்பியது. இதனால் ஒருவர் மீது ஒருவர் , மாறி மாறி புகார் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த மோதல் நடந்து முடிந்து  3 ஆண்டுகளுக்குப் பிறகு ,இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக ரமேஷ் பவார் மீண்டும் திரும்பியுள்ளார். இதுதொடர்பாக இந்திய மகளிர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான மிதாலி ராஜ் பேட்டியில் ஒன்றில்  கூறும்போது, ‘கடந்த காலம் முடிந்து விட்டது. மீண்டும் கடந்த காலத்திற்கு  திரும்ப செல்ல முடியாது.

தற்போது பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ரமேஷ் பவார், இந்திய மகளிர் அணியின் முன்னேற்றத்திற்கான  திட்டத்துடன் வந்திருப்பார் என்று நம்புகிறேன். நாங்கள் இருவரும் ஒன்றிணைந்து அணியை வழி நடத்தி செல்வோம். அதோடு வருங்காலத்தில் அணியை வலுவானதாக உருவாக்க தொடர்ந்து பணியாற்றுவோம். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கு வலுவாக தயாராகுவோம்’ என்று கூறினார். மேலும் அவர் கூறும்போது, நாங்கள்  7 ஆண்டுகளுக்குப் பிறகு ,டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளோம். இந்த டெஸ்ட் போட்டிக்கு பிறகு, இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பகல்-இரவு ஆட்டமாக விளையாடுவது நல்ல விஷயமாக இருக்கிறது . கிரிக்கெட்டில் மூன்று வகையான போட்டிகளும் ஒன்றாக நடத்தப்பட வேண்டும் ,என்றும் அனைத்து வகையான போட்டிகளிலும் வீராங்கனைகள் அனுபவித்து விளையாட வேண்டும்’ ,என்று அவர் கூறினார்.

Categories

Tech |