பாயாசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மூதாட்டியிடம் நகையை கொள்ளையடித்து சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரத்தில் கனகாம்பாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு பத்மாவதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 7ஆம் தேதியன்று வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கோவிலுக்கு வருமாறு பத்மாவதி அழைத்துள்ளார். மேலும் பத்மாவதி தனக்கு திருமண நாள் என்று மூதாட்டிக்கு பாயாசம் கொடுத்திருக்கிறார்.
அந்த பாயாசத்தை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மூதாட்டி மயங்கி கீழே விழுந்து விட்டார். அப்போது மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயின் மற்றும் வளையலை பத்மாவதி கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இது தொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்ததால் பத்மாவதியை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து பத்மாவதியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் எனது கணவனுக்காக தனது நகைகள் அனைத்தையும் அடகு வைத்து விட்டேன். இதனால் அடகு வைத்த நகையை திருப்புவதற்காக நான் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக” அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.