பயிர் காப்பீடு செய்து 29 வருவாய்க் கிராம விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி கோட்டூரில் வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் ஆனைக்கொம்பன் நோயால் பாதிப்பு அடைந்து பெரிய இழப்பிற்கு விவசாயிகள் ஆளாகினர். இந்நிலையில் விவசாயிகள் தாங்கள் சாகுபடி மேற்கொண்ட நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்த போதிலும் கோட்டூர் ஒன்றியத்தில் 29 வருவாய் கிராமங்களில் பயிர்க் காப்பீட்டுத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் எவ்வித நிபந்தனையும் இன்றி அனைவருக்கும் பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தியும் கோட்டூர் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக புறப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அங்குள்ள வேளாண் விரிவாக்க அலுவலகத்தை முற்றுகையிட்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.