Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சாலையில் பழங்களை கொட்டி…. சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்…. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்….!!

சாலையோர பழக்கடை வியாபாரிகள் பழங்களை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள தென்னம்பாளையம் மார்க்கெட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. அங்கு திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தாங்கள் பயிரிடும் காய்கறி, பழங்களை தென்னம்பாளையம் உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் திருப்பூர் பல்லடம் சாலையில் வியாபாரிகள் சிலர் காலை 4:00 மணி முதல் காலை 8 மணி வரை சாலையோரம் பழம் வியாபாரம் செய்து வந்துள்ளனர்.

இதனால் விவசாயிகள் தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், சாலையோர கடைகளை அகற்ற வேண்டும் எனவும் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோர கடைகளை அகற்றினர். இந்நிலையில் சாலையோர பழக்கடை வியாபாரிகள் கடைகளை அகற்றியதால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், தென்னம்பாளையம் வியாபாரிகளுக்கு பாதிப்பு இல்லாமல் அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை மட்டும் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளனர்.

மேலும் சாலையோர பழ வியாபாரிகள் திடீரென பல்லடம் சாலையில் பழங்களை கொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபின் வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |