ஒரே நேரத்தில் 22 மயில்கள் மர்மமாக விவசாய தோட்டத்தில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழ பொய்கை பட்டியில் ராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் 16 பெண் மயில்கள், 6 ஆண் மயில்கள் என மொத்தம் 22 மயில்கள் ஒரே நேரத்தில் இறந்து கிடப்பதாக மணப்பாறை வனச்சரகர் மகேஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த 22 மயில்களின் உடலையும் கைப்பற்றி வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து விட்டனர்.
அதன் பின்னர் கீழையூர் கால்நடை மருத்துவர்கள் இறந்த 22 மயில்களையும் சோதனை செய்தபோது அதன் உடலில் விஷத்தன்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவற்றின் உடலில் கலந்த விஷம் என்னவென்று தெரியாததால் திருச்சி மண்டல தடவியல் ஆய்வகத்திற்கு மயில்களின் ரத்த மாதிரியை அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் வேட்டையாடுதல் தடுப்பு பிரிவு மற்றும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அந்த தோட்டத்தின் உரிமையாளர் ராசு மற்றும் அவரது மனைவி பொன்னம்மாள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் ராசு உடனடியாக தப்பித்து ஓடிவிட்டார்.
இதனை அடுத்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வனத்துறையினர் பொன்னைம்மாளை கைது செய்து ஆஜர்படுத்த உள்ளனர். அதன்பின் நிபந்தனை ஜாமினில் பொன்னம்மாள் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து மாவட்ட வன அலுவலர் சுஜாதா கூறும்போது, விவசாயிகள் தங்களின் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிப்பதால் அதனை சாப்பிடும் வனவிலங்குகள் இறப்பதாக கூறுகின்றனர். ஆனாலும் தேசிய பறவையான மயில்களை கொலை செய்வது சட்டவிரோதமான செயல் ஆகும். எனவே உண்மையான காரணம் தெரிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 முதல் 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் விவசாயிகளுக்கு வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வன விலங்கு ஆர்வலர்கள் கூறும்போது, கடந்த இரண்டு மாதங்களில் மணப்பாறை பகுதியில் 40 மைல்கள் கொல்லப்பட்டதாகவும், வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து யாரையும் கைது செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.