2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில் தண்ணீர் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 930 கோடி செலவில் 4,865 ஏரிகளை தூர்வாரி உள்ளோம், விவசாயிகள் ஒத்துழைப்போடு மேலும் பல ஏரிகளை தூர்வார உள்ளோம் என தெரிவித்துளளார்.
மேலும் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக தமிழக அதிகாரிகள் விரைவில் கேரளா செல்ல உள்ளனர். இரு மாநிலம் சார்பிலும் அரசு உயர் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றுள்ள நிலையில் கேரளா செல்கின்றனர். பினராயி நல்லவர் என்பதால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். முதற்கட்டமாக அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றுள்ளது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் முதல்வரை சந்தித்து பேசுவோம் என கூறியுள்ளார். மேலும் முல்லை பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்தியது அதிமுக அரசு தான் என்று கூறிய முதலவர், 142 அடியாக உள்ள அணையை 152ஆக உயர்த்தி பலப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டும் மரம் வெட்ட கேரள அரசு அனுமதிக்கவில்லை என தகவல் அளித்துள்ளார்.
விரைவில் நீதிமற்ற அனுமதியுடன் 152ஆக உயர்த்தி பலப்படுத்தப்படும் என கூறியுள்ளார். மேலும் கொள்கை விளக்க குறிப்பு குறித்து விளக்கம் அளித்த முதல்வர் பழனிசாமி, விவேகானந்தர் பாறையில் உள்ள படகுத்துறை மத்திய அரசின் உதவியோடு நீட்டிப்பு செய்யப்படும். பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு 2021 மார்ச்சில் நிறைவடையும் என தெரிவித்தார்.
மேலும் விவேகானந்தர் நினைவு பாறை, திருவள்ளுவர் சிலை பாறையை இணைக்க பாதசாரிகள் பாலம் கட்டப்படும் என்றும் பாதசாரிகள் செல்ல சுமார் 140 மீட்டர் நீளம் கொண்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் அளித்தார். அதுமட்டுமின்றி ஆசிய வளர்ச்சி வங்கி கடனுதவி மூலம் 8,047 கி. மீ தமிழக சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.