தமிழகத்தில் 10 வயதுக்குட்பட்ட 341 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக நாளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பேச இருக்கிறார். இதனிடையே பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்துள்ளது. இதே போல தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து வழக்கம் போல மாலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 98பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1173 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்த 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த சுகாதாரத்துறை செயலாளர் 58 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
33,850 வீட்டுக் கண்காணிப்பில், 136 அரசு முகாமில் கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தார். 63,380 பேருக்கு 28 நாள் கண்காணிப்பு முடிந்துள்ளது. 25 அரசு ஆய்வு மையமும், 9 தனியார் ஆய்வு மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிய பீலா ராஜேஷ் கொரோனா பாதித்ததில் 31 பேர் 10 வயதுக்குட்பட்டோர் என்று தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.