பெய்ரூட் வெடிவிபத்து தொடர்பான சர்வதேச விசாரணைகளில் தனக்கு உடன்பாடு இல்லை என லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் கூறியுள்ளார்.
லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுக கிடங்கில் ஆறு ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது. அந்த வெடி விபத்தில் 150 பேர் உயிரிழந்த நிலையில், 4 ஆயிரத்திற்கும் மேலானோர் படுகாயமடைந்தனர். அதே சமயத்தில் அந்த வெடி விபத்தால் 3 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடிவிபத்து பற்றி எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் சர்வதேச விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என லெபனான் நாட்டின் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதனைப் போலவே லெபனானுக்கு பயணம் செய்த பிரான்ஸ் அதிபர் மெக்ரோனும் சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வலியுறுத்தி இருந்தார். ஐநா மனித உரிமைகள் ஆணையமும் இதனை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் வெடிவிபத்து தொடர்பான சர்வதேச விசாரணை அழைப்புகளை லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் நிராகரித்து விட்டார். இதுபற்றி பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறும்போது, “அமைச்சகம் வெடி விபத்து தொடர்பான விசாரணையை ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதனால் பெய்ரூட் வெடிவிபத்து தொடர்பான சர்வதேச விசாரணைகளில் எனக்கு உடன்பாடில்லை” என்று அவர் கூறியுள்ளார்.