Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெய்து வரும் தொடர்மழை…. இதை காயவைக்கும் தொழில் பாதிப்பு…. தவிக்கும் தொழிலாளர்கள்….!!

மழையின் காரணமாக கருவாடு காயவைக்கும் தொழில் பாதிக்கப்பட்டதால் 500-க்கும் மேற்பட்டவர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கொள்ளுக்காடு, மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மந்திரிபட்டினம், செம்பியன்மாதேவிபட்டினம் உட்பட 34 கிராமங்களில் 4 ஆயிரத்து 500 நாட்டுப்படகு வைத்திருப்பவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். மேலும் மல்லிபட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் போன்ற பகுதிகளில் 134 விசைப்படகு வைத்திருப்பவர்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்தப் படகுகளில் அன்றாடம் வரக்கூடிய இறால், நண்டு, மீன், கணவாய் போன்றவற்றை மீனவர்கள் விற்றுவிட்டு பின் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகின்றனர்.

மேலும் கழிவாக கூடிய மீன்களையும் மற்றும் சங்காயம் எனப்படும் சிறிய வகை மீன்களையும் வாங்கி துறைமுகங்களிலே காயவைத்து கருவாடு விற்பனை தொழிலும் அவர்கள் செய்து வருகின்றனர். இதில் உணவிற்கு பயனாகும் கருவாடுகளைவிட கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படும் சிறிய வகை சங்காய மீன்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இவற்றை மொத்தமாக வாங்கி காயவைத்து கிலோ 10 முதல் 12 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு உருவாகும் கருவாடுகள் அனைத்தும் நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு கோழி தீவனத்திற்காக அனுப்பப்படுகிறது.

இதனையடுத்து மல்லிப்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் போன்ற துறைமுகங்களில் மட்டும் கருவாடுகளை தரம்பிரிக்க, காயவைக்க, சாக்கு மூட்டைகளில் கட்டி லாரிகளில் ஏற்றுவதற்கு தினசரி 500-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் கருவாடு காயவைக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினசரி 500-க்கும் மேற்பட்டோர் வேலை இன்றி தவித்து வருகின்றனர்.

Categories

Tech |