அண்ணன் சாவிற்கு ஏன் வரவில்லை என்று தந்தை கேட்டதால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கதிரம்பட்டி கிராமத்தில் சரவணன்- நந்தினி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு யஸ்வந்த், நிரஞ்சன் என இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் கணவன் சரவணன் தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் ஆண்டியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த நந்தினியின் பெரியப்பா மகன் குமார் என்பவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்து விட்டார். இதனால் நந்தினியின் தந்தை குப்பு லிங்கம் கணவன்- மனைவி இருவரையும் சாவு வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு சரவணன் இப்பொழுது கொரோனா காலகட்டம் என்பதனால் சாவு வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று நந்தினியிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து தந்தை குப்பு லிங்கம் நந்தினியிடம் போன் மூலம் சாவு வீட்டிற்கு வர முடியவில்லையா என்று கேட்டுள்ளார். இதனால் சிரமமடைந்த நந்தினி வீட்டில் இருக்கும் அறைக்கு சென்று கதவை உள்புறமாக பூட்டி உள்ளார். இதனால் கணவர் சரவணன் அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நந்தினி தனது புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நந்தினியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் சப்- கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றார்.