பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தை தலைவர் குணசேகரன் வழங்கியுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அஞ்சல் நிலையத்தில் சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய 70 பெண் குழந்தைகளை செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் இணைத்து அவர்களுக்கு சேமிப்பு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் கோட்ட கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமை தாங்கி உள்ளார். இதில் துணை கோட்ட கண்காணிப்பாளர் முன்னிலையில் வகித்துள்ளார். இதனையடுத்து அஞ்சலக அதிகாரி பிரியா வரவேற்றுள்ளார்.
பின்னர் நகராட்சித் தலைவர் குணசேகரன் கலந்து கொண்டு செல்வமகள் திட்டத்தில் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு புத்தகங்களை வழங்கியுள்ளார். இவற்றில் கண்காணிப்பாளர் சிவக்குமார் கூறியதாவது, மத்திய அரசு இந்திய அஞ்சல் துறையின் மூலமாக செயல்படுத்தி வருகின்ற சமூக பாதுகாப்பு திட்டங்களில் மிக முக்கியமான ஒன்று செல்வமகள் சேமிப்பு திட்டம். இதில் முதலில் ஆயிரம் ரூபாய் செலுத்தினால் மட்டுமே இத்திட்டத்தில் சேர முடியும் என இருந்த நிலையில் மாற்றி தற்போது அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் 250 ரூபாய் செலுத்தினால் இத்திட்டத்தில் சேரலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து இத்திட்டத்தை கண்டிப்பாக பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண் குழந்தைகள் எதிர்காலம், கல்வி மற்றும் அவர்களின் திருமணத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஆதலால் அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை இத்திட்டத்தில் இணைத்து அவர்களின் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.