சமையல் செய்து கொண்டிருந்த பெண் மீது சுவர் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூரில் உள்ள ஆவாரங்குப்பத்தில் கடந்த 1990-ம் ஆண்டு ஜவகர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழாக ஆதி திராவிடர் நலத்துறை சார்பாக வீடுகள் கட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வீடுகள் கட்டப்பட்டு 3௦ வருடங்களுக்கும் மேலாக ஆகிவிட்டதால் தற்போது பெய்து வரும் கனமழையால் வீட்டில் பக்கவாட்டு சுவர்கள், சிமெண்ட் சிலாப்புகள், மேற்கூரைகள் அனைத்தும் சேதமடைந்து கிழே விழுந்து வருகிறது. இதனையடுத்து இப்பகுதியில் இருக்கும் வீட்டில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும் போது சுவர் இடிந்து அவர் மீது விழுந்ததால் படுகாயமடைந்துள்ளார்.
பின்னர் சரஸ்வதியை மீட்டு அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து சுவர் இடிந்து விழுந்து படுகாயமடைந்த சரஸ்வதியின் குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளை செய்யுமாறும், பின் பழைய வீட்டு கட்டிடங்களை புதுப்பித்து தர வேண்டி தொகுதி செந்தில்குமார் எம்.எல்.ஏ மாவட்ட கலெக்டரிடம் கேட்டுள்ளார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வருவாய் துறையினர் மற்றும் வருவாய் ஆய்வாளர் சித்ரா நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளனர்.