வாலிபர் இறந்த துக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடை பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து 2-வதாக சரவணனை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் சரவணன் வெளியூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இதனால் சுந்தரி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தரி திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனையடுத்து சுந்தரியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்தபோது அதற்குள் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பத்தமடை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுந்தரியின் உடலை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் சுந்தரியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சுத்தமல்லி பகுதியில் நாகலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கம்பெனியில் சுந்தரியும் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதுகுறித்து அறிந்த நாகலிங்கத்தின் குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த நாகலிங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் துக்கத்தில் இருந்து வந்துள்ள சுந்தரி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.