பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அக்ரானம் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் பொக்லைன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் தனியாக இருந்த தனலட்சுமி குழந்தைகள் தூங்கியவுடன் சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து தூங்கி எழுந்ததும் குழந்தைகள் அம்மாவை தேடியுள்ளனர். ஆனால் அவர் வராததால் குழந்தைகள் அழத் தொடங்கினர். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் சென்று பார்த்தபோது தனலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் கணவர் சிவா மற்றும் காமநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தனலட்சுமியின் உடலை உடனடியாக கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.